Saturday, November 27, 2010

தெருஓரம்

                                         போக்குவரத்து காவல் நிலையத்தின் பூட்டிய கேட்டுக்கு வெளியே இரண்டாவது படியில் உட்கார்ந்திருந்தாள். முதல் படியில் கால்களை நீட்டிக்கொண்டு இடது முழங்கையில் அழுக்கை தேய்த்துக்கொண்டிருந்தாள். அழுக்குச்சுருள் பிசைந்து உருட்டிய மாவின் குட்டிகளாக கிழேவிழுந்தது.  அவளை நேரில் பார்த்தால் நீங்களும் அந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் கொஞ்ச நாளுக்கு முன்வரை இப்படியான அழுக்கை பார்த்திருக்க மாட்டாள் என்று.  உறுதிசெய்ய முடியாத கணிப்பில் எடுத்துக்கொண்டால் கூட ஓரளவு  வசதி வாய்ப்பு இருக்கிறவளாகத்தான் இருந்திருப்பாள். சூரியன் வீசும் தீட்சனையை கூட்டி குறைக்கும் தன்மைகொண்டதா? இன்று மண்ணே ஈரமில்லாமல் சுண்டிவிடுகிற அளவுக்கு காய்கிறது. அவள் தாங்கமுடியாத எரிச்சலளால் உடலையும் தலையையும் அடிக்கடி சொறிந்துக் கொண்டிருந்தாள்.



                               அவன் கைபேசியின் கட்டளைக்கு கட்டுப்பட்டவனாகவே வந்தான். சமூகம் தூசி என்று புறம் தள்ளிவிடுகின்றவைகள் அவன் கண்களில் இயல்பாகவே ஒட்டிக்கொள்கிறது. தற்செயலாகத்தான் அவளை பார்த்தான். அவள் முழங்கயில் இன்னும் அழுக்கு தேய்துக்கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நிறுத்திவிட்டாள். அந்த நிலையிலும் அவளுக்கு தன் சுய கவுரவத்தில் உறுதியாயிருக்கிற எண்ணம் இருந்தது. அவன் கவனிக்காதவன் போல் அவளை பார்த்தான். அதேநேரத்தில் அவளும் பார்த்துவிட்டாள். அவள் பார்வை 'ஒருத்தியையும் மிச்சம் வைக்கமட்டானுங்க  இந்த ஆம்பளைங்க என்று கேட்பதுபோல்' இருந்தது. நல்ல அழகுதான். நல்ல கலருங்கூட. அனால் திருஷ்டி பொட்டு வைத்ததுபோல் இடது கண் பூ பட்டு  வெள்ளையாயிருந்தது. மொட்டை அடித்த தலையில் மீண்டும் கைக்கு பிடிபடாத அளவு மயிர் வளர்ந்திருந்தது. மேல் துப்பட்டா இல்லாமல் சுடிதார் போட்டிருந்தாள். அழுக்கு என்று சொல்ல முடியாதபடி அவள் டிரஸின் டிசைன்  இருந்தது. ஏறக்குறைய  அய்ந்தடி உயரம்  எட்டுகின்றவள். எண்ணில் எழுதுகின்ற கால்மணி நேரம் தான் அவள் வயதாக இருக்கும். அவள் முக அமைப்புக்கு மார்பின் சதைகள் மற்றவர்களை ஈர்க்கும்படியாகவே இருக்கவேண்டும்,  ஏனோ அப்படி இல்லாமல் இருந்து.  செருப்பில்லாமல் நடக்க முடியவில்லை போல எதோ கண்ணில் கிடைத்ததை காலுக்கு போட்டிருந்தாள். அதில் ஒன்று மூளியாகவும்  ஒன்று ஆணின் செருப்பாகவும் இருந்தது.

                                 யாரை நொந்து கொள்வது. ஏன் இப்படி வாழ்வு எதிர்பாராமல் சரிந்துவிடுகிறது? கவலைப்படாமல் முன்னேறிக் கொண்டிருக்கிற  பூமியின் கால்களை உடைத்து இதற்கு தீர்வு சொல்லி விட்டு போ என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.   ஒரு வேளை அவன்  அந்த கேள்வியை யாரிடமாவது  கேட்டால் எந்த சங்கடமும் இல்லாமல் அவளோடு  வழியனுப்பிவைக்கும் இந்த சமூகம். அவள் எழுந்து எதையோ நோட்டமிட்டாள். பார்வை தரையை சுற்றியது. பக்கத்தில் ரோஜாச் செடிகளை விற்கிறவர்கள் தொட்டிகளிலும் பிளாஸ்டிக் பாக்கட்டுகளிலும் வரிசையாக ரோஜாக்களை அடுக்கியிருந் தார்கள். ஒரு சிலச்செடியிலிருந்து வசீகரம் இல்லாத ரோஜாக்களும் வீரியம் இல்லாத மொட்டுகளும் யாராலும் பரிக்கப்படாமல் பரிதாமாக இருந்தது. மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைகளுக்கு கூட இதுதான் நிலையோ?  செடிகளை ஒட்டி இரண்டு மூன்று பிளாஷ்டிக் குடத்தில் தண்ணிர் இருந்தது. செடியை விற்பனைச் செய்கிறவர்கள் சற்றுத் தள்ளி கணவனும் மனைவியும் நிழலில் உட்கார்ந்திருந்தனர்.

                                  அவள் கிழே கிடந்த பிளாஷ்டிக்  'டீ' டம்ளரை எடுத்துக் கொண்டு  சற்று மெதுவாக போவதும் வருவதுமாக இருந்தாள். செடிகளுக்கு உரிமை கொண்ட பெண் இவளைப் பார்த்து  தன் கணவனிடம்  பரிதாபமாக  ஏதோ சொன்னாள்.
   

                         இவள் தண்ணிர் குடத்தை பார்க்கிறாள். அவர்களையும் பார்க்கிறாள். குடத்தை நோக்கி சற்று கிட்டத்தில் போகிறாள். செடியாளர்களைப் பார்த்து திரும்பி விடுகிறாள். பூந்தொட்டி விற்கிறவள் தண்ணிருக்குத்தான் வருகிறாள் என்பதை ஊகித்துவிட்டு அமைதியாய் இருகிறாள். இவள் குடத்தையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்து வேகமாகச்சென்று  'டீ' டம்ளரில் மொண்டு வாயில் ஊற்றிக்கொண்டாள். உரிமையாளர்களை பார்க்கிறாள். மெதுவாக நடந்து சென்று இன்னொரு முறை முயற்சி செய்தாள்.  இப்போது சற்று தள்ளி வந்து மீண்டும்   உற்றிக்கொண்டாள்.    ஓட்டையில் ஒழுகியது போக ஒரு வாய் தண்ணிர் முழுமையாக விழுங்கவில்லை. குடத்து தண்ணிர் செடிகளுக்காக நகராட்சி கழிவறையில் இருந்து கொண்டு வந்திருந்தார்கள். குடத்தில் தூசிகள் மேலேமிதந்திருந்தது. இன்னும் தாகம் அடங்கவில்லை போல பார்வை குடத்தின் மீதே இருந்தது. என்ன நினைத்தாளோ சடாரென்று பிளாஷ்டிக் டம்ளரை கீழே போட்டு நடந்தாள். எதற்காகவும் எப்போதும்  நகரத்தின் இயக்கம் நிற்கவில்லை. மனிதனின் துக்கத்தை, அலுவலகத்தின் இழுத்தடிப்புகளை, வியாபாரத்தின் ஏமாற்று வேலைகளை  அதிகாரிகளின் ஆணவத்தன் மைவாய்ந்த அடக்குமுறைகளை கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் மென்மையான காற்றைப்போல்  இயங்கிக்கொண்டு இருந்தது. அவள் அவைகளை மேலோட்டமாக  சுற்றிப்பார்த்துவிட்டு  சிரித்துக்கொண்டே போகிறாள். அவன் அவள் போகிற பக்கமாகவே போகிறான். அவளை தொடர்ந்து கவனித்துக்கொண்டே நடந்தான். 


                                           அவள் சாலையோரமாகவே  நடக்கிறாள். வாழ்ந்து திருப்தியானவர்கள் வீசி எறிந்த பொருட்களையே இவள் கண்கள் தேடுகின்றன. சாலையில் நசுங்கிக் கிடந்த வாட்டர் கேனை எடுத்துத் திறக்கிறாள். யோசிக்கவே இல்லை. மூடியைத்திறந்து வாயில் ஊற்றிக்கொள்கிறாள். கேனில் சுற்றியிருந்த லேபிலை பிரித்து போட்டு நடக்கிறாள். போட்டிருந்த செருப்பு  இவள் சின்ன காலுக்கு வெளியே கிடந்தது. இவள் தாங்கித் தாங்கி நடக்கும் போது செருப்புகள் இடித்துக்கொள்கிறது. தீர்ப்புகளை பொருட்படுத்தாது சீமாட்டி தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு முகப்பிலேயே நிற்கிறாள். அவளைக் கடந்து காலி பிளாட் ஓரமாக நடக்கிறாள்.

                                               நான்கு சக்கர தள்ளு வண்டியின் கண்ணாடி தடுப்பில் மூட்டையாக பேல் பூரி, பொரி, சம்ஷா விபாரம் நடந்தது. நான்கு அய்ந்து வாலிபர்கள் சின்ன தட்டு நிறைய வாங்கி சப்பிடுகிறார்கள். நடந்தவள் கடையைப் பார்த்து கிட்டச்சென்று அமைதியாக நின்றாள். கடைக்காரன் பார்த்தான். வாலிபர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இவள் வெகு நேரம் கடையே வெறித்து  பார்த்திருந்தாள். 

                           கண்காணித்தவன்  சற்று தூரத்தில் நின்று அவளையும், பேல் கடையையும் அடிக்கடிப் பார்த்தான். இவன் அந்த பெண்ணை பார்ப்பதை பேல் கடைக்காரன் பார்த்தான். இவனுக்கு தர்மசங்கடமாய் இருந்தது. திடீரென மீண்டும் செல்போனை எடுத்து பெசுவதுபோல் இருந்தான். வேகமாக வாகனங்கள் போய்க்கொண்டிருந்தது. நடுவயதை கடந்தவர் சடாரென்று "டே...டே.... யோ... ஸ்டாப்...ஸ்டாப்" சத்தமாக கத்திக்கொண்டு சாலையைக்  கடந்தது. சிரிப்பை ஏற்படுத்தும் படியாக இருந்தது. அவன் சிரித்துவிட்டான். கடையையே பார்த்திருந்தவள் அந்த சத்தத்தை கேட்டதும் கடைக்காரன் பார்த்து விடாதபடி திரும்பி சிரித்தாள் மீண்டும் கடைப்பக்கம் திரும்பி இயல்பாய் இருந்தாள். கடைக்காரன் மும்முரமாக விபாரம் பார்த்தான். வாலிபர்கள் சாப்பிட்டு  கைகழுவினார்கள். எச்சில் தண்ணிர் தெரித்து. சிறுதுளிகல் அவள் கால்களை நனைத்தது.  அவள், மேல் பல்வரிசை சீராகத் தெரியும்படி நேரடியாகவே சிரித்து விட்டுப்போனாள். அவள் அமைதியாகவே தரையை தேடிக்கொண்டு போனாள்.




                                      பிச்சை எடுப்பவர்கள் வேண்டுமென்றே இரண்டு, முன்றுபேர் நின்று பேசிக் கொண்டிருக்கும் போதும்  இல்லை, தனியாய் இருக்கும் போதும் அதிகமாய் நச்சரிப்பார்கள். இயல்பில்லாமல் தங்கள் முகபாவங்களை முறுக்கி, கோணலாக்குவார்கள். கொடுத்துவிட்டபிறகு அடுத்த நொடியே எந்த பிரிதிபளிப்பும் இல்லாமல் விலகிவிடுவார்கள். இவர்கள் தேர்ந்த தொழில் முறையை கற்றுக்கொண்ட பிச்சைக்காரர்கள். சிலர் யார் கொடுக்கிற முகம் என்று தேடி அவர்கள் கிட்டத்தில் சென்று சற்று தயங்கித் தயங்கி நின்று சத்தமில்லாமல் கேட்பார்கள். கொடுத்தபிறகு சற்று நின்று வணக்கம் செலுத்திவிட்டு போவார்கள். இவர்கள் புதிதாய் பிச்சை எடுக்க பழகுபவர்கள். சிலர் பெற்றுக்கொண்டு நன்றாக இருக்கனும் என்று மனசு நிறைஞ்சி வாழ்த்துவார்கள்.  இவர்கள் எதேச்சியாய் கேட்பவர்கள்.  அவன் இப்படித்தான் பிச்சைக்காரர்களைப் பற்றி தன் மனதில் மதிப்பீடு செய்துவைத்திருந்தான். 


                    அதையும் கடந்து ஒரு நாள் சின்ன பையன் வயிற்றை தடவிகாட்டி கடைகாரன் காலைதொட்டு கடை கடையாய் கேட்டான். எல்லோரும் துரத்தினார்கள். அவன் மனிதர்கள் இவ்வளவு கல் நெஞ்ஜம் படைத்தவர்களா என்று பையன் பின்னாகவே   நடந்து பையனை நிறுத்தி  ஏன் படிக்கவில்லை ?  குடும்பம் எங்க? அப்பா அம்மா உறவு இல்லலையா? இலவசமான புத்திமதி! சொல்ல.  பையன் பக்கத்து தெரு தான், அம்மா அப்பா தொரத்திட்டாங்க என்றதும், அவன் அமைதியானான்.  பையன், அவன் கை பாக்கட்டுக்கு போகிறதா  என்பதையே கவனித்தான்.  தக்காளி சாதம் வங்கிக்கொடுத்து கையில் அய்ந்து ரூபாய்   கொடுத்தான்.  ஸ்டைலாக வாங்கிக்கொண்டவன் சற்று தூரம் சென்று தன் கால்சட்டை  பாக்கட்டிலிருந்து பான் பராக் எடுத்து வாயில்  கொட்டிக்கொண்டு போனான்.'ஏமாற்றுபவர்கள் எதிராளியைத்தான் முட்டாளாக்குவார்கள் போல' அவளைப்பார்த்த போதுதான் ஒரு செயல் பாட்டை பல பரிமானங்களில் தங்கள் தேவைக்கேற்ப செயல் படுத்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பது விளங்கியது. நாம் ஏன் அவள் பின்னாக சென்று கண்காணிக்கவேண்டும் என்று தன்னை கேட்டுக்கொண்டான். அவனே உலகின் எல்லா செயல்பாட்டையும் காரணம்  தெரிந்தா  செய்கிறோம் என்று தன்னை தேற்றிக்கொண்டு சென்றான் . அவள் நடந்தாள். நாம் கூட்டிக்கொண்டு போய்விடலாமா? உறவுகள் அவ்வளவு சுலபமாய் கிடைத்துவிடுமா?  தெருவில் அலைந்து திறிகின்ற நாய்குட்டியாகதானே   இவளும் சுற்றிக்கொண்டு கிடக்கிறாள்.   மஞ்சல் ஆறு சாதி, மதத்தை, மனித அவலங்களை சிக்கலில்லாமல் சமப்படுத்திக் கொண்டு சென்று கொண்டிருந்தது.



                                           அவள் பேக்கிரி எதிரில் நின்றாள். வாசலுக்கு வெளியே எதோ குப்பை க்கொட்டி இருந்தார்கள். ஆனால் குப்பை இல்லை  அது பிஸ்கட் தூளைப்போலவும்  கலந்திருந்தது.  எதையோ கிளறினாள் அதில் ஒன்றும் கிடைக்கவில்லை .பக்கத்தில் மிரண்டா பாட்டில் காளியாக இருந்தது . அதில் கிடந்த சிறு துளிகளுக்காக அவசரமாய் எடுத்தாள். திறந்து அவசரமாய் சாய்த்தாள். ஒரே சொட்டு உருண்டு வாயில் விழுந்தது. மீண்டும்  கடையைப்பார்த்தாள். பணத்தை நீட்டுகிறவர்கள் கைக்குத்தான் பொருட்கள் கைமாறுகின்றன. அவள் ஞானியைப்போல் சிரித்து விட்டு நடந்தாள். காளத்தி சைவ உணவகம் எதிரில் கழிவுநீர் மேடையில் தியானம் செய்பவள் போல் உட்கார்ந்தாள். ஸ்தம்பித்து போன வாகன நெரிசலை முதுகில் சுமக்கும் சாலை மிரண்டுபோனது. அவள் இதுவரை யாரிடத்தில் எதுவும் கேட்கவில்லை .அவன் அவளைப்பற்றி ஒரு முடிவுக்கு வந்திருந்தான். அவள்  உண்மையான கைவிடப்பட்டவள்தான். ஏதாவது கைமாறு செய்துவிட்டு கிளம்ப நினைத்தான். பக்கதில் கடை ஏதும் இல்லை அவளை கடந்து போகவேண்டும், கவனிப்பாளோ?  மனிதர்களில் நல்லவர்கள்  யாருமே இல்லை என்ற முடிவில்தான் அவள் இருப்பாள். ஆயிரம் பேர் போகிறார்கள் வருகிறார்கள் அவனுக்கு மட்டும் தான் அவளை கடக்கும்போது  குற்ற உணர்வு. அதுவும் அல்லாமல் ஏதாவது வாங்கி வருவதற்குள் வேறு எங்காவது போய் விடுவாளோ? வேகமாக போனான். சற்று தூரத்தில் தான் ஓட்டல் இருந்தது. ஒரு செட் பரோட்டா வாங்கி வந்தான். அவள் அங்கு இல்லை .அவன் பதட்டமடைந்தான். எங்கே போனாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்தில் எந்த தடயமும் இல்லை. வாழ்வில் உயர்ந்து விட்டவர்கள் அநேகர் வந்த வழியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பயித்தியங்கள் வந்த வழியை திரும்பத்  திரும்ப ஆராய்கின்றன. அவள்  வந்த வழியை பார்த்தான். மீண்டும் திரும்பி சற்று நடந்தான். நான்கு வழி சாலை சிக்னல் எல்லோரையும் கண்காணித்தது.  அரசியல் தலைவர்களின் கை உயர்ந்த  பேனருக்கு கீழே  ஒரு 'டீ'க்கைடையின் வாசலில்   நின்றிருந்தாள். 

                         தினந்தோரும் பல ஏமாற்று பேர்வழியை பார்த்திருப்பார்கள் போல கடைக்காரன் எந்த சலனமும் இல்லாமல் இருந்தான். அவள் எப்போதும் போல் வெறுமையாய் திரும்பினாள். அவன் கையில் வைத்திருந்ததை கொடுத்தான். அவள் சிரித்துக்கொண்டே வாங்கினாள். ஏன் சிரிக்கிறாள். உன்னைப்போல் பயித்தியக்காரன் இருக்கமாட்டான் என்கிறாளா? அவள் சிரிப்பதைப்பார்த்து கடைக்காரன் சிரிக்கிறானே. அவனுக்கு சற்று அவமானமாகத்தான் இருந்தது. அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. கிளம்பிவிட்டான்.

                   சற்று தூரம் வந்தபிறகு நின்று விட்டான். அவள் அதை சாப்பிடுவாளா? சேர்வா மிகவும் சூடாக இருந்ததே. அதை பிரிக்கத்தெரியுமா? எந்த பக்கம் போயிருப்பாள். திசையை அறிந்து போகிறவளா அவள். நேராக போனமாதிரிதான் இருந்தது என்று திரும்பினான். அவன் கண்கள் ஒதுக்குப்புறமான ஓரங்களையே தேடிச்சென்றது. வருவோரும் போவோரும்  பூட்டிய செருப்புக்டையை பார்த்தார்கள். மனித இயல்பு ஏன் தான் இப்படி பின் தங்கியிருக்கிறதோ? பேருந்தில் சுண்டல் விற்றால் கொஞ்சநேரம் யாருமே வாங்கமாட்டார்கள், பிறகு யாராவது ஒருத்தர் வாங்கினால் அதன் பிறகு பட படவென வாங்குவார்கள். தெருவில் வித்தை காட்டினால் முதலில் யாருமே கூடமாட்டார்கள். அதன் பிறகு கீழே மலம் இருப்பது கூட்த்தெரியாமல் கூடிவிடுவார்கள். இது இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை. அவன்  விதிவிலக்கா என்ன. அந்த திசையை நொக்கிப்பார்த்தான். அவள் பிளாட்பாரத்தின் மீது உட்கார்ந்து பார்சலை பிரித்தாள். சேர்வாவை பிரித்து ஊற்றிக்கொண்டு கொஞ்சமாக தொட்டு சாப்பிட்டாள். மிச்சம் வைத்த சேர்வா குடிகாரனைப்போல் சாய எத்தனித்தது. சாய்ந்து விடாமல் பத்திரமாக வைத்தாள். பரோட்டாவை சின்ன சின்ன துண்டுகளா பிட்டு அழகாக சாப்பிட்டாள். அவன் இதுவரை அவள் பின்பக்கமாகவே  நின்றிருந்தான். மொட்டை அடித்து வளர்ந்திருந்த அவள் தலையின் சுழி அடர்ந்த காட்டில் விழுந்துவிட்ட நிலவைப்போல் இருந்தது. அவன் பஸ்சுக்காக காத்திருப்பவன் போல பாவனை செய்து நின்றிருந்தான். அவள் சாப்பிடுவது சரியாக தெரியவில்லை. சாலையில் இறங்கி வழிப்போக்கனைப்போல்  நடந்தான். மீண்டும் எதிர் திசையில் நடந்து வந்தான். அவள் நிதானமாக சாப்பிட்டாள். அவன் இப்போது சற்று பதட்டமாகவே அவள் முகத்தை உற்றுப்பார்த்தான். அசலாக அவன் மகளின் சிரித்த முகம் தெரிந்தது.  அவளைக் கடந்து வந்து விட்டபின்பும். 






நம்புழுதி.